வடக்கிலுள்ள 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்கி அதிபர் இன்றி செயற்பட வைக்கப்போகின்றீர்களா?

வடமாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்கி அதிபர் இன்றி செயற்பட வைக்கப்போகின்றீர்களா? என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

யாழ் வேம்படி மகளிர் பாடசாலையில் கடந்த ஒரு வருடமாக பிரதி அதிபர் ஒருவர், உபஅதிபர் ஒருவர் இன்றி இயங்கி வந்தது. இந்நிலையில் அண்மையில் அதன் அதிபர் ஓய்வு பெற்று சென்றுள்ளார்.

ஆனால் அப்பாடசாலையின் அபிவிருத்தி சமூகமும் மற்றும் பழைய மாணவர் சங்கமும் அதிபர் நியமனம் தொடர்பில் மூன்று பெயரை பரிந்துரை செய்து கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியது.

இந்த நிலையில் தற்போது தற்காலிகமாக ஒரு உபஅதிபர் பதில் கடமையாற்ற நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது மட்டுமன்றி நாட்டில் உள்ள 87 தேசிய பாடசாலைகளில் பெரும்பாலான தேசிய பாடசாலைகளில் நிரந்தர அதிபர் இல்லை.

இவ்வாறான நிலையில் வடமாகாண 14 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த 14 பாடசாலைகளையும் தேசிய பாடசாலை ஆக்கி அதிபர் இன்றி இயங்க வைக்கப்போகின்றீர்களா? இதேவேளை தேசிய பாடசாலை ஆக்கினால் நீச்சல் தடாகம் உள்ளிட்ட வளங்கள் வரும் என கதை சொல்லப்படுகின்றது.

வடமாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் மத்திய கல்லூரியில் மாத்திரமே நீச்சல் தடாகம் உள்ளது.

அதுவும் அமைக்கப்பட்ட சில நாட்களில் மாணவர்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் இன்றுவரை இருக்கின்றது.

ஏனையவற்றில் அதுவும் இல்லை. இதை அமைப்பதற்கு இதுவரை மத்திய அரசு முயன்றதாக தெரியவில்லை.

எனவே ஏமாற்றுக்கதைகளை கூறி மாகாணத்தின் பாடசாலைகளை மாகாண சபையின் அதிகாரத்தை மத்திக்கு தாரைவார்க்க வேண்டாம் என கோருகின்றேன்.

தேசிய பாடசாலை என்ற பெயருக்காக பெற்றோர்கள், பாடசாலை சமூகம் மற்றும் தரப்பினர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு கையளிக்க கோரவேண்டாமென விநயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

மாகாண பாடசாலைக்கும் தேசிய பாடசாலைக்கும் ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள், பரீட்சைகள் எல்லாம் பொதுவானது.

இவ்வாறான நிலையில் எதற்காக தேசிய பாடசாலை ஆக்க முற்படுவதன் பின்னணி என்னவென கேட்கின்றேன்.

தமிழ் மக்கள் அதிகாரத்துக்காக போராடி வரும் சமூகம் தற்போது நில ஆக்கிரமிப்புக்கள், குடியேற்றங்கள், வெளி மாவட்டத்தவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான வேலைகள் தமிழர் பகுதிகளில் இடம்பெறுகின்றது.

தமிழ் மக்கள் அதிகாரத்துக்காக போராடி வரும் நிலையில்,

மாகாண அதிகாரத்தை மத்திக்கு பெற்றுக் கொடுத்து தேசிய பாடசாலையாக மாற்ற எம்மவர்கள் துணைபோக வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அற்ப,

சொற்ப அதிகாரத்தைக்கூட நாம் இழப்பதற் இடம் கொடுக்ககூடாது என்ற அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்