வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடலாம்: மனோகணேசனின் கருத்தை நிராகரித்த மாவை!

தமிழீழத்தை கைவிட்டு விட்டதால் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடலாமென அமைச்சர் மனோகணேசன் கூறியிருக்கும் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நிராகரித்துள்ளார்.

தேர்தல்கள் வருகின்ற போது போட்டியிடுவது பற்றி தீர்மானங்களை நாங்கள் எடுப்போம். அதுவரையில் அவசரப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகாநாடு நடைபெற இருக்கின்றது. அதற்காக கட்சி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கட்சியின் கொழும்புக் கிளைக் கூட்டமும் அண்மையில் நடைபெற்றிருக்கின்றது.

அக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த எங்கள் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி கொழும்பிலும் போட்டியிட வேண்டுமென்று கேட்டிருந்தனர்.

அதனை வைத்து நாங்கள் தமிழீழத்தைக் கைவிட்டு விட்டோம். அதனால் எங்கும் போட்டியிடலாம் என்று மனோகணேசன் கூறுகின்ற கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

உண்மையில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் பல சந்தர்ப்பங்களில் எங்கள் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றன. குறிப்பாக ரெலோ இயக்கம் மற்றும் தமழரசுக் கட்சியின் சார்பிலும் போட்டியிட்டிருக்கிறோம்.

அதிலும் புத்தளம் பிரதேசத்தில் கூட எமது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட வரலாற்றை நாங்கள் அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆனபடியினால் இப்போது தான் நாங்கள் போட்டியிடப் போவதாக கூறமுடியாது.

ஆனபடியால் இடைக்காலத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய மலையகத் தமிழ் கட்சிகளில் இருந்தவர்கள் அக் கட்சிகளில் போட்டியிட்டார்கள்.

இப்போதும் போட்டியிட்டார்கள் ஆகையினால் அவர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற மனப்பான்மையோடு நாங்கள் சில சந்தர்ப்பங்களில் போட்டிக்கு வேட்பாளரை நிறுத்தியிருக்காத சந்தர்ப்பங்கள் இருந்தது.

ஆனால் இப்பொழுது கொழும்பிலே இருக்கின்ற தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களும் பல முக்கியமானவர்களும் எங்கள் கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென எங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் நாங்கள் சகல இடங்களிலும் வெற்றி பெறுவதற்காக ஒன்றுபட்டு தேர்தலில் நிற்க வேண்டுமென்ற கருத்து ஆராயப்பட்டிருக்கின்றது.

ஆகையினால் தேர்தல் வருவதற்கு முன்னர் நாங்கள் எவ்வாறு போட்டியிடப் போகின்றோம் என்ற தீர்மானத்திற்கு வந்து அதைப்பற்றி ஆராயலாம் அல்லது முடிவை எடுக்கலாம் என்றார்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்