வாகனம் ஓட்டிக்கொண்டு உலக கிண்ண கிரிக்கெட் பார்த்தவருக்கு சிட்னியில் நேர்ந்த கதி!

வாகனம் ஓட்டிக்கொண்டு உலக கிண்ண கிரிக்கெட் பார்த்தவருக்கு சிட்னியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் Steering wheel-உடன் கைத்தொலைபேசியை பொருத்தி அதில் இந்தியா – அவுஸ்திரேலியா உலகக்கிண்ண கிரிக்கெட் ஆட்ட விபரங்களைப் பார்த்தவாறு பின்னிருக்கையிலிருந்த இரண்டு வயது குழந்தைக்கு ஒழுங்காக ஆசனப்பட்டி அணிவிக்காமல் 70 km/h வீதியில் 94 km/h வேகத்தில் சென்றுகொண்டிருந்த நபரை பொலிஸார் பிடித்து 24 demerit-தண்டப்புள்ளிகளை அறவிட்டுள்ளார்கள்.

இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை Cumberland Highway – Smithfield, பகுதியில் இரவு 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரினால் பிடிக்கப்பட்டவர் 33 வயதான Liverpool நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மறிக்கப்பட்ட வாகன ஓட்டுனரிடம் – “இது எவ்வளவு ஆபத்தானதொரு செயற்பாடு தெரியுமா” – என்று கேட்டபோது, அவர் “நிச்சயமாக, மிகவும் பாரதூரமான விடயம். ஆனால், தனது வாழ்நாளில் இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறு நடந்துகொண்டதில்லை” – என்று கூறியிருக்கிறார்.

வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்தியமை, பின்னிருக்கையிலிருந்த குழந்தைக்கு ஒழுங்காக ஆசனப்பட்டி அணிவிக்காதமை, வேகமாக வானத்தையோட்டியமை ஆகிய மூன்று குற்றங்களுக்கும் இரட்டை அபராதமாக 24 புள்ளிகளை பொலிஸார் அறிவிட்டுள்ளார்கள்.

மகாராணியாரின் பிறந்த தினத்தையொட்டிய நீண்ட வார இறுதியுடைய விடுமுறை காலப்பகுதியில் சிட்னியில் வீதிக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.