விக்கிலீக்ஸ் நிறுவனர் தனது விதியை தானே தேடிக் கொண்டார்! அதிரடி பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர்

அண்மையில் கைதாகிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசான்ஜே விடயத்தில் விசேடமாக கவனம் செலுத்தப்படமாட்டாது என அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார்.

அவர் தனக்குரிய விதியை தானே தேடிக்கொண்டவர். ஆகவே, இதில் அவுஸ்திரேலியா கருத்து சொல்வதற்கு எதுவுமே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலியன் அசான்ஜே கைது மற்றும் அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு அந்நாடு மேற்காண்டிருக்கும் முயற்சிகள் குறித்து அவுஸ்திரேலிய ஊடகம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அவுஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்கு போகும்போது அந்தந்த நாட்டு சட்டங்களை மதித்து பின்பற்றவேண்டும். மீறுபவர்களுக்கு எதிராக அந்நாடுகள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதற்குரிய பொறுப்பை அவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் அவுஸ்திரேலியா தலையிடுவதற்கோ கருத்து சொல்வதற்கோ எதுவுமில்லை. தூதரக மட்டத்தில் அவருக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருக்கும்போது சிக்கலில் மாட்டும் ஏனைய அவுஸ்திரேலியர்கள் எவ்வாறு நடத்தப்படுவார்களோ அதேபோன்ற கவனிப்புத்தான் அசான்ஜேக்கும் கொடுக்கப்படும்.

அவருக்கு விசேட கவனிப்பு கிடையாது” என Scott Morrison மேலும் கூறினார்.