விபத்தில் உயிரிழந்த குடும்பம்: ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 2 நாட்களாக கதறி அழுத சிறுவன்

விபத்தில் குடும்பம் மொத்தமும் உயிரிழந்த பின் 6 வயது சிறுவன் மட்டும் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கதறி அழுது கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்த Belkis (வயது 35) என்ற பெண் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி விட்டு, கணவன் Alessandro (37) மற்றும் இரு மகன்களுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத அதிவேக சாலையில் மற்றொரு காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கார் வேகமாக காட்டுப்பகுதியில் உள்ள பள்ளத்தில் புகுந்து நின்றது.

இந்த சம்பவத்தில் Belkis, அவருடைய கணவன் மற்றும் 8 வயது மகன் சாமுவேல் பரிதாபமாக காரிலே உயிரிழந்தார்.

இதில் சிறிய காயங்களுடன் உயிர்தப்பிய 6 வயது சிறுவனான பெஞ்சமின் இரண்டு நாட்களாக அங்கிருந்து செல்வதற்கு வழி தெரியாமல் கதறி அழுது கொண்டிருந்துள்ளான்.

அப்போது அப்பகுதி வழியாக சென்ற ஒரு நபர் உடல்குன்றிய நிலையில் சிறுவனை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் காரை வெளியில் எடுத்து மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபர்களை கண்டறியும் விதமாக சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.