வெளிநாடுகளில் தஞ்சம் கோர நினைக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! பின்னணி என்ன?

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு செல்வது என்பது தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் குடிபெயர முற்பட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு அயல் நாட்டிலும், வெளிநாட்டிலும் தஞ்சம் தேடி சென்றனர்.

சிலர் ஆபத்தான படகு வழிப் பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்று உயிரை மாய்த்த துன்பியல் சம்பவமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைத்து வாழ்பவர்களும் உண்டு. அங்கீகாரம் எதுவுமின்றி வாழ்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

இந்த நிலையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், வெளிநாடுகளில் குடிபெயர்வது படிப்படியாக முடிவுக்கு வந்திருந்தது.

எனினும், தற்போது மீண்டும் அது தலைதூக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படியே, கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸூக்கு சொந்தமான ரீயூனியன் தீவை சென்றடைந்த 64 இலங்கையர்கள், அங்கிருந்து இன்று இலங்கைக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்குத் தயாராக இருந்த 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஆட்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர்கள் இருவரும் திஸ்ஸமகாராம பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் கூறியுள்ளனர்.

ஆக இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் கோர நினைப்பவர்கள் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செல்கின்றனரா? அல்லது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதா?

இதில் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தை நோக்காகக் கொண்டு செல்பவர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கு செல்வது என்பது தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில் அதனை தடுத்தும் நிறுத்தம் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.