ஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி இனந் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று, டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இனந் தெரியாத 15 பேர், பண்டாரியை தாக்கியுள்ளனர்.

அவர்கள் ஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பிகளாலும் கண் மூடித்தனமாக தாக்கி விட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் தலையிலும், காதுப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்ட பண்டாரி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரி தற்போது, மூத்த வீரர்களுக்கான டெல்லி மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாரியத் தலைவராக பதவி வகித்துவருகிறார்.

இதனால் அணியில் தேர்வு செய்யப்படாத ஏதேனும் ஒரு வீரர் பழிவாங்கும் முயற்சியாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் தெரிவிக்கப்படுகிறது.