ஹிருணிக்காவை வருத்தமடைய செய்த ஜனாதிபதி மைத்திரி!!

ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தமையையிட்டு தான் கவலைக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில், நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

“நாட்டில் இடம்பெற்ற ஊழல்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது.

ஆனால், சிறைச்சாலையில் உள்ள துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தற்போது தீர்மானித்துள்ளார் என்ற ஒரு தகவல் பரவிவருகிறது.

இதுதொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது தந்தையைக் கொலை செய்த ஒருவருக்கு எதிராக நான் பேசவில்லை. ஆனால், ஜனாதிபதி அவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டால், அது சமூகத்தில் பாரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இப்படியான ஒரு ஜனாதிபதிக்கு ஆதரவளித்தமையையிட்டு, நாம் இப்போதும் கவலையடைகிறோம்.

அவருக்கு தற்போது அதிகார ஆசை வந்துவிட்டது. இதனாலேயே, ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.