2019 இன் எதிர்பார்ப்புக்கள்: சவால்களா…?? தீர்வா…???

அரசியலில் கடந்த ஆண்டு எதிர்பாராத பல மாற்றங்கள நடைபெற்று பாரிய சிக்கலைகளை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.

பொருளாதாரம் என்றுமில்லாத வீழ்ச்சியினைச் சந்தித்திருந்தது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை நோக்கிச் சென்றதோடு இற்றைவரை நீடிக்கிறது இந்நிலை.

மேலும் கடந்த ஆண்டிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இந்த ஆண்டும் தொடரும் நிலையே உள்ளது. அதாவது கடந்த காலங்களை போலவே வார்த்தைகளுக்குள் தம்மை வரையறுத்துக்கொண்டது என்று தான் கூற வேண்டும்.

நிலுவையிலுள்ளது காணாமல் போனோர் விவகாரம். தொடரும் போராட்டங்கள். கண்டுகொள்ளாத விடயங்கள் என்று அடுக்கு மொழியில் அடுக்கிக் கொண்டே செல்லும் பிரச்சனைகள் தொடர்கிறது முற்றின்றி.

இவை அத்தனை பிரச்சனைகள் ஒரு புறம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் அரசியல் தலையிடி வேறு புது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அரசியல் இழுபறி நிலைக்குள் ஆட்சியாளர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டிருப்பார்கள். அதாவது சிறுபான்மை கட்சிகளின் ஒருவித பலத்தை..

தான்தோன்றித் தனமாக செயற்பட்டால் என்ன நேரும் என்பதை சில விடயங்கள் சில ஆட்சியாளர்களின் மண்டையில் உரைக்க எடுத்துரைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

காணிகளுக்காக போராடும் மக்கள் ஒருபுறம், புரட்டிப்போட்ட வெள்ளம் ஒரு புறம், இப்படி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல மீண்டும் மீண்டும் இன்னல்கள் தொடர்கிறது வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வில்..

சோகங்கள், அரசியல் நெருக்கடிகள், சூழ்ச்சிகள், பதற்ற நிலை என்று சூழ்ந்திருந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்து 2019 இல் நுழைந்திருக்கிறோம்.

இந்த ஆண்டாவது தீர்வைக் கொடுக்குமா.. அல்லது சவால்களை எதிர்கொண்டு ஆண்டு முழுவதும் பயணிக்கப் போகிறோமா என்பதை கடந்து செல்லும் காலம் தான் கற்பிக்க வேண்டும்.

-யாழ்ரதி நடராஜா-