3 புதுமுக வீரர்களுடன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையில் இத்தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அணித்தலைவரான சப்ராஸ் அஹமட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தென்னாபிரிக்கா தொடரின்போது பெலுக்வாயோவை நோக்கி, இனவெறி தொடர்பாக பேசியதால், நான்கு போட்டியில் விளையாட சப்ராஸ் அஹமட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் பின்னணியிலேயே அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அணியின் தலைவராக சகலதுறை வீரர் சொயிப் மாலிக் தொடர்ந்தும் நீடிக்கின்றார்.

மேலும், பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாபர் அசாம், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, பகர் சமான், சதாப் கான் மற்றும் தாலட் ஹீசைன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக உமர் அக்மல், ஜுனைத் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று புதுமுக வீரர்கள் ஒருநாள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

25 வயதான துடுப்பாட்ட வீரர் சாட் அலி, பந்துவீச்சாளரான மொஹமட் ஹஸ்னைன் மற்றும் துடுப்பாட்ட வீரரான அபிட் அலி ஆகியோரே அணிக்குள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.