72 லட்சம் பரிசு பெறப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருப்பா?

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வருவதை உணர்ந்து கொண்ட தனியார் நிறுவனம் புதுவித போட்டியை அறிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் விட்டமின்வாட்டர் நிறுவனத்திடம் ஸ்மார்ட்போனில் இருந்து ஏன் உங்களுக்கு இடைவெளி வேண்டும் என்பதை விளக்கும் தகவல் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப் செய்து அதனை ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும்.

பங்கேற்போர் கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக் சேர்த்து பதிவிட வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ள ஜனவரி 8, 2019க்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும்.

பின் நிறுவனம் சார்பில் தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்வோர் 365 நாட்களுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மொபைல் போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதுதவிர லேப்டாப், டெஸ்க்டாப், அமேசான் அலெக்சா, கூகுள் ஹோம் போன்ற சாதனங்களை பயன்படுத்தலாம். எனினும், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

விட்டமின்வாட்டர் சார்பில் போட்டியாளர் ஜனவரி 22 ஆம் திகதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும்.

ஒரு வருடம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்தவில்லை என்பதை விட்டமின்வாட்டர் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டே பரிசு தொகை வழங்கப்படும் எனத் தெரிகிறது.